தமிழ் புதையல்
வியாழன், 12 மார்ச், 2009
ஈழக்குறிப்புகள் : பத்திரிகை தர்மம் -- என். ராமும் லசந்த விக்கிரமதுங்கவும்
தி சண்டே லீடரில் வெளிவந்த லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கத்தின் தமிழ் வடிவம் இங்கே. ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று, எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசிந்தவால் முன்கூட்டியே ஊகிக்கமுடியவில்லை. மற்றபடி, தன் மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று தெளிவாக எழுதியும் வைத்திருந்தார்.
ராஜபக்ஷேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்ஷேவின் ஆட்சியை தீவிரமாக விமரிசனம் செய்து அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைலைகளை லசிந்த விக்கிரமதுங்க நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்துவிடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்ஷேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்துநிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார்.
லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்ஷேவை விமரிசனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமரிசனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசிந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக்கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. தி சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்தரத்தை அவர் அளித்திருந்தார்.
லசிந்த விக்கிரமதுங்கவைப் போலவே என். ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர் இன் சீஃப். என். ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால், என்றாவது லசிந்தவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் இதுவரை பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?
இது தேசிய அவமானம் என்பதாக மங்களுர் பப் விவகாரம் பற்றி நீட்டியும் முழக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும் ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக்கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
லெட்டர்ஸ் டு தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்படவேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்னையும். ராஜபக்ஷே அப்பழுக்கற்ற தியாகி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் செய்யவேண்டும். மற்றபடி, தனி ஈழம் அமையும் என்று சொல்வதற்கில்லை.
சிறிதும் சளைக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ராஜபக்ஷேவிடம் பேசி ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறார் என். ராம். தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும்விட தமிழர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசமும் நேசமும் உண்டு. எங்கள் எதிரி விடுதலைப் புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக்கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
என். ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். 'உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.' லசிந்த தன் மனச்சாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவி்ல்லை.
Thanks to: http://marudhang.blogspot.com
0 Comments:
கருத்துரையிடுக
<< Home