தமிழ் புதையல்

வெள்ளி, 23 ஜனவரி, 2009

புகைப்பதை நிறுத்துவது எப்படி?



மார்க் ட்வெய்ன் ஒரு முறை சொன்னாராம், "புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம். நான் 1000 தடவைகள் அந்த மாதிரி நிறுத்தியிருக்கிறேன்" என்று.

புகைப்பதை நிறுத்துவதற்கு எளிதான வழியென்று Cold Turkey முறை என்று ஒன்று சொல்கிறார்கள். முதலில் புகைப்பதை நிறுத்துவதற்கான ஒரு நாளை தேர்ந்தெடுக்கவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளி ஒரு நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறார்கள். பிறகு அந்த நாளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டே சென்று, குறிப்பிட்ட நாளில் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும். ஆனால் இது ஆகிற வேலையாக எனக்குப் படவில்லை.

ஒரு கணவனிடம் மனைவி ஒருத்தி முறையிட்டாளாம், "என்னங்க, என் தம்பி சந்நியாசம் வாங்கப் போகிறானாம். கொஞ்சம் கொஞ்சமா உலக ஆசைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா விட்டுகிட்டிருக்கான்."

அதற்கு கணவன் "கவலைப்படாதே! உன் தம்பி கண்டிப்பா சந்நியாசியா ஆக மாட்டான்" என்று ஆறுதல் சொன்னானாம்.

உடனே மனைவி, "அதெப்படி உறுதியா சொல்றீங்க?"

கணவன், "இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சந்நியாசி ஆக முடியாது. அதனால உன் தம்பி சந்நியாசி ஆக மாட்டான்" என்று சொன்னான்.

அதற்கு மனைவி "பின்னே கொஞ்சம் கொஞ்சமா ஆகாம, எப்படி சந்நியாசி ஆவாங்க?" என்று கேட்டாளாம்.

உடனே கணவன் "இப்படித்தான்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசியாகி போய் விட்டானாம்.

புகைப்பது, குடிப்பது போன்றவைகளையும் இப்படித்தான் டக்கென்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து ஒரேயடியாக விட்டு விட வேண்டும். ஆனால் இப்படி நிறுத்துவதற்கு, சந்நியாசம் வாங்க எவ்வளவு மனப்பக்குவம் தேவையோ அந்தளவுக்கு மனவலிமை தேவை.

சரி, "டக்"

நிறுத்தியாயிற்று. 10 நிமிஷம் ஆயிற்று. 30 நிமிஷம். ஒரு மணி நேரம் ஆயிற்று. அடுத்த தம் போட வேண்டிய நேரம். "தம் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாலும் அந்த தம் அடிக்க வேண்டும் போல் இருக்கும் உணர்வு வரும்பொழுது என்ன செய்வது?"

அந்த மாதிரி உணர்வு ஏற்படும் நேரத்தில், யாரிடமாவது பேசுங்கள், சிறிது காலாற நடை போடுங்கள்(அப்படியே நடந்து பெட்டிக்கடைக்கு போய் விடாதீர்கள்!), தண்ணீர் குடித்து பாருங்கள். செய்யும் வேலையில்/வேறு ஏதாவது பொழுதுபோக்கில் முழு கவனத்தையும் செலுத்த முயலுங்கள்.

"தினசரி சாப்பிட்டவுடன் ஒரு தம் அடித்து பழகியாயிற்று. இப்பொழுது திடீரென்று எப்படி அதை மாற்றுவது?"

டோட்டலாக தம் அடிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த பழக்க முறையையே மாற்றுங்கள். உதாரணத்திற்கு, சாப்பிட்டவுடன் தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிடாமல் வேறு இடத்தில் சாப்பிடுங்கள். காபி குடித்தவுடன் தம் அடிக்க வேண்டுமா? காபி குடிக்கும் நேரத்தில் டீ குடித்து பழகுங்கள். காலையில் ஆஃபீஸ் வரும் வழியில் நின்று ஒரு தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமான வழியை மாற்றி புது வழியில் வர முயலுங்கள். இது போல் தம் அடிக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட மற்ற பழக்க முறைகளில் இருக்கும் ஒழுங்கு முறைகளை உடைத்துப் போடுங்கள்.

"நான் இது போல் பல தடவைகள் தம்மை விட முயன்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் முடியவில்லையே. என்ன செய்ய?"

திரும்பவும் முயலுவோம். தவறில்லை. சென்ற தடவைகளில் தம்மை விட முயன்ற பொழுது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஞாபகப்படுத்தி, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.

முக்கியமான தேவை மனவலிமை. முதல் மூன்று நாட்கள் தாண்டுவது மிகக் கடினம். அதற்குபின் கொஞ்சம் பழகிவிடும். தொடர்ந்து மூன்று மாதம் இருந்து விட்டால், அப்புறம் சுத்தமாக நினைவையே விட்டு விடலாம்.
posted by Jayakumar B.E at 3:13 AM

1 Comments:

r u try this thing?

29 ஜனவரி, 2009 அன்று 9:47 PM  

கருத்துரையிடுக

<< Home