தமிழ் புதையல்

செவ்வாய், 10 மார்ச், 2009

ஜெயலலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா?

நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம்.

 

ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடும் புரட்சிகர அமைப்புகள், தமிழின இயக்கங்கள், போராடுவது போல காட்டிக் கொள்ளும் சமரச சக்திகள், துரோகிகள், எல்லாரும் உண்டு. ஆனால் ஈழத்தின் மூச்சு நெறிக்கப்படவேண்டுமென துடிக்கும் எதிரிகளே தமது கொடூரக் கைகளால் ஈழத்தை கட்டியணைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

 

jayalalitha-big

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

 

போரென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள், புலிகளை ஒடுக்கவேண்டும், சீமான், திருமாவளவனைக் கைது செய்யவேண்டும், புலி ஆதரவாளரான கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் ஊளையிட்ட ஜெயலலிதா என்ற கோட்டான் ஈழத்தின் மீதான போர் நிறுத்தப் படவேண்டுமென எட்டுமணிநேரம் உண்ணாவிரதம் இருந்து உலகத்தையே வியக்க வைத்திருக்கிறதாம். இரண்டு தடவைகள் தமிழகத்தை ஆண்டு ஒட்டச்சுரண்டி பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் தனிப்பட்ட முறையில் ஐந்து இலட்சமும், கட்சி சார்பாக ஒரு கோடியும் ஈழத்து மக்களுக்காக பிச்சையிடுகிறதாம். இந்த கலெக்ஷன் கல்லா செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுக்கப்படுமாம்.

ஏற்கனவே முல்லைத்தீவிலும், வன்னியிலும் செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள அரசு விரட்டிவிட்டது. இனி அம்மா கொடுத்தபணத்தை வைத்து செஞ்சிலுவைச் சங்கம் என்ன செய்யும்? செத்து மடியும் மக்களின் ஈமச்சடங்கு செய்வதற்குத்தான் அந்தப் பணம் பயன்படும். ஈழத்தின் கருமாதிச் செலவுக்கு புரட்சித்தலைவி ஸ்பான்சர்! அதற்கு ஜெயா டி.வி லைவ் டெலிகாஸ்ட்!

அப்புறம் இந்த உண்ணாவிரத நாடகத்தில் பேசிய புரட்சித் தலைவி இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, இறையாண்மை கெடாமல் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும், இதைவிடுத்து திசைமாறிய ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உளறியிருக்கிறார். இதைத்தானே ராஜபக்சேவும் பேசி இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்குத்தான் போர் என்று ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அமல்படுத்தி வருகிறார். இந்திய அரசும் இந்த இறையாண்மை புனிதத்தை வைத்துத்தான் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது. தற்போது மருத்துவக்குழுவை அனுப்பி அடிபட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறதாம். ஒரே நடவடிக்கை, ஒரே பேச்சு, ஒரே கருத்து இருவேறு பொருள்களில் பேசமுடியுமென்றால் ஈழத் தமிழர்கள் செய்த பாவம்தான் என்ன? ஒருவேளை இப்படியிருக்கலாமோ? ஈழத்தமிழ் மக்களை கொல்வது ராஜபக்சேவின் பணி, கருமாதி காரியம் செய்வது ஜெயலலிதாவின் பணி?

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான் கைது செய்யப்பட்டது போல அதே கருத்துக்ளை வைத்திருக்கும் கருணாநிதியும் கைது செய்யப்படவேண்டுமென புரட்சித் தலைவி முழங்கிய போது அருகில் இருந்த புரட்சிப் புயல் வைகோ நெளிந்தார். நல்லவேளையாக அந்தப் பட்டியலில் வைகோவைச் சேர்க்காமல் அருள்பாலித்தார் அம்மா.

ஈழத்தின் கருமாதிக்கான உண்டியலில் ஐந்து இலட்சத்தைப் போட்ட வைகோ, அம்மாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும் பேறு கிடைத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஈழத்திற்கு துரோகம் செய்ததாக கருணாநிதியைத் திட்டிய வாய் கூச்சநாச்சமின்றி ஈழத்தமிழர்களின் வில்லியை மனதாரப் பாராட்டிய காட்சிக்கு இணையான ஆபாசம் இந்த உலகில் எதுவுமில்லை.

அடுத்த ஆபாசம் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன். இந்த உலகில் யாரும் செய்யமுடியாத இந்த எட்டுமணிநேர உண்ணாவிரதத்தை செய்யத் துணிந்த அம்மாவின் தியாகத்தை வாய்வலிக்கப் பாராட்டிய அவர் இந்தப் போராட்டத்தைப்பார்த்து உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்கள் தமழிகமே தம் பக்கம் அணிவகுத்து நிற்கிறது என மகிழ்ச்சியடைந்து நிம்மதி அடைந்திருக்கிறார்களாம். எல்லாம் ஈழத்தமிழன் இளிச்சவாயன் என்ற நம்பிக்கையில் தா.பாண்டியன் வைத்திருக்கும் துணிச்சல்தான்.

அம்மா அளவுக்குக்கூட ஈழத்தின் போராட்டத்திற்காக எதுவும் பேசாத இடது கம்யூனிஸ்ட் கட்சியின் என்.வரதராஜன் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் வராமல் வெகு ஜாக்கிரதையாக ஒரு விளங்காத அறிக்கையை விளக்கெண்ணை போல அதுவும் எழுதி வைத்துப் படித்தார். எல்லாம் அம்மாவின் தயவில் இரண்டு சீட்டுக்களைப் பெற்று வெற்றிபெறவேண்டும் என்ற அடிமைத்தனம்தான்.

அதற்கப்புறம் தலித் மக்களுக்கு புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி, குடியரசுக் கட்சியின் வை.பாலசுந்தரம், முசுலீம்களுக்கு லீக் பிரதிநிதிகள், தேவர் சங்க நாட்டாமைகள் எல்லாரும் புரட்சித் தலைவின் உற்சவ உலாவிற்கு மந்திரம் ஓதி புண்ணியம் செய்தார்கள்.

மற்றபடி உண்ணாவிரதத்திற்கு வரவில்லையென்றாலும் அம்மா இந்த அளவிற்கு இறங்கி வந்து சேப்பாக்கத்தில் குந்தியிருந்ததற்கு நன்றி தெரிவித்து உருகியவர்களில் திருமாவளவனும், பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாஸூம் அடக்கம். வில்லியை வில்லி என்று கூட சொல்லமுடியாத அந்த துரதிர்ஷடசாலிகளை உண்மையில் வழிநடத்திய விசயமென்னவென்றால் இன்னமும் நாடாளுமன்றத்திற்கான கூட்டணி சேர்க்கைகள் முற்றுப் பெறாமல் இருப்பதுதான். டெல்லியின் அதிகாரமையத்திற்கான ஆட்டத்தில் முல்லைத் தீவின் மரண ஓலம் கேட்குமா என்ன?

இதெல்லாவற்றையம் விட கொடுமையான விசயம் என்னவென்றால் அம்மாவின் உண்ணாவிரதத்தைப் பாராட்டி சுப்பிரமணிய சாமி அறிக்கை விட்டதுதான். இனி புரட்சித் தலைவியைப் பாராட்டவேண்டியதில் விடுபட்ட தலைவர் ராஜபக்சே மட்டும்தான். அவரையும் ஒரு அறிக்கை விடுமாறு இந்து ராம் கேட்டுக் கொண்டால் இந்த நாடகம் நேர்த்தியாக முடிக்கப்படும்.


posted by Madhu at 9:19 PM

0 Comments:

கருத்துரையிடுக

<< Home