தமிழ் புதையல்
சனி, 7 பிப்ரவரி, 2009
மண் வாசம்...
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்
அனுமதி இல்லை பிறருக்கு
இயற்கை விவசாயம் செய்துகொண்டு
இல்லாதோர்க்கு உதவிக் கொண்டு
இயங்கிக்கொண்டிருந்தார் முடிந்த மட்டும்
இன்று இயந்திரங்களின் உதவி கொண்டு
இறுதி மூச்சைப் பிடித்துக் கொண்டு
இயங்கிக் கொண்டிருக்கிறது உடல் மட்டும்
உள்ளே செயல் இழந்த நிலையில் பெரியவர்
வெளியே செய்திக்காக காத்திருக்கும் உரியவர்
அங்கும் இங்குமாய் பதட்டத்தோடு
அலைந்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பல திட்டத்தோடு
அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்
அவசரமான நகர வாழ்க்கை
அவரவர் கவலை அவரவருக்கு
"சொத்து பிரிச்சு கொடுக்காம பெரிசு
செத்துப் போயிசேந்திருமோ?"
"மருந்துக்கு செலவு செஞ்சே கை
இருப்பு கரஞ்சுக்கிட்டே வருதே?"
"இன்னும் எத்தன நாளு தான்
இங்கே காத்துக் கெடக்க வேணுமோ?"
"விடுமுறை முடியப்போகிறதே
விடுதலை எப்பத்தான் கிடைக்கும்?"
"புள்ள குட்டிய விட்டுட்டு வந்திருக்கோமே
மெல்ல ஒரு எட்டு பாத்திட்டு வந்திருவோமா?"
பலதரப்பட்ட மனிதர்கள்
பலவகையான கவலைகள்
மெல்ல வெளியேவந்த மருத்துவர்
மொத்தமாய் கையை விரிக்கிறார்
"ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்
ஒருமணிக்குள் முடிந்துவிடும்"
அனைவரும் மொத்தமாய்
அவர்முன் கூடி நிற்கிறார்கள்
கசிந்த செய்தி கேள்விப்பட்டு
கதறலோடு வந்து சேருகிறான்
கடைக்குட்டி அவன் கிராமத்திலிருந்து
அவன் உள்ளே நுழைந்ததும்
அங்கே சூழலே மாறிப்போய் விடுகிறது
அனைவரும் முகம் சுழிக்கிறார்கள்
அவனைப் பார்த்து முறைக்கிறார்கள்
சுற்றிலும் சூழ்ந்து நிற்கிறது
சுத்தமான மண் வாசம்
களத்திலிருந்து நேராய்
கிளம்பி வந்திருக்கிறான்
அப்போதுதான் அது நிகழ்ந்தது!
அய்யாவின் கைவிரல் அசைந்தது
திங்கள், 2 பிப்ரவரி, 2009
ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்து போனதோ…………..
ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை
என் தோப்பினுள் அலைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ
முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
அர்த்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ