தமிழ் புதையல்
ஞாயிறு, 4 ஜனவரி, 2009
நடிப்பு ஒரு தகுதியா?
இன்று உலகம் சுழன்றுக் கொண்டிருப்பது ஊடகங்களினால் தான். இந்த ஊடகங்கள் ஒரு நாள் செயல்படாவிட்டாலும் கூட இந்த உலகம் அப்படியே ஸ்தம்பித்து, உறைந்துவிடும். இத்தகைய வலுவான ஊடகங்களின் செய்திகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது இரு சாரார் மட்டுமே. ஒரு சாரார் அரசியல்வாதிகள். மற்றொரு சாரார் திரைப்படத்துறையினர்.
அரசியல்வாதிகள் என்றாலே அழுக்குப்படிந்த ஓநாய்க்கூட்டம் என்ற கருத்து மக்கள் மனதில் வெகு ஆழமாக இவர்களே (அரசியல் வாதிகள்) தம்முடைய நடவடிக்கைகளினால் பதித்துவிட்டதினால், ஊடகங்களில் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை ஆளுங்கட்சியினரைத் தவிர. இவர்களையும் எந்த எதிர்க்கட்சியாவது பலமாக சாடினால் மட்டும் அதைப்பற்றி எங்காவது ஒரு பெட்டிச் செயதி வெளியிடப்படும் அவ்வளவுதான். ஆனால், இம்மாதிரியான பிரச்சனைகள் திரைப்படத்துறையினருக்கு இல்லை. இவர்களைப் பற்றியதான எதிர்மறை எண்ணங்கள் மக்கள் மனதில் இல்லாததினாலும். திரைப்படத்துறையினர், என்றாலே ஒரு விதமான கவர்ச்சி இருப்பதாக எண்ணுவதினாலும் ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு இவர்களைப்பற்றி செய்திகள் வெளியிடுகின்றன. உண்மையில் இவை, செய்திகளாக வெளிவருவதில்லை. அவர்களைப்பற்றியதான ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை ஏற்படுத்தும் மயக்கும் லாகிரி வஸ்துவாகத்தான் வெளிவருகின்றன.
வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போன்றதான, அமானுஸ்ய சக்தி படைத்தவர்களான தோற்றத்தை படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோரிடத்தும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த மாய தோற்றத்தை உண்மையென நம்பி, பலரும் அந்த கவர்ச்சிக்கு அடிமையாகிவிடுவதோடு, முரட்டுத்தனமாக, மூடத்தனமாக அவர்களை பின்பற்றவும் தொடங்கிவிடுகின்றனர்.
திரைப்படத் துறையினரும் தமக்கு வெகு எளிதாக கிடைத்துவிட்ட ‘பிரபலம்’ என்பதனை சாதகமாக்கிக் கொள்ள அனைத்து வழிகளிலும் தீவிரமாக ஈடுபடத்தொடங்கி விடுகின்றனர். இதன் முதற்கட்டமாக, பொது விளம்பரங்களில் தோன்றி மக்களுக்கு அறிவுரை வழங்கத் தொடங்குகின்றனர்.
மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்காத இந்த அறிவிலிகள், யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்லும், சுய சிந்தனை சிறிதும் இல்லாத, இந்த கிளிப்பிள்ளைகள், ஆபாசத்தை விலைக்கு விற்கும் இந்த கூத்தாடிகள் எதனடிப்படையில் மக்களுக்கு அறிவுரை கூற முன்வருகின்றன? பிரபலம் என்பதும் ஒரு தகுதியா? குப்பைத்தொட்டி ஒன்று பிரபலமாக இருப்பதினால், அந்தக் குப்பைத் தொட்டி மக்களுக்கு அறிவுரை வழங்கிடுவதா? சாத்தான் வேதம் ஓதுவதைப் போல, இவர்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். உண்மையில் மனசாட்சியிருப்பின், இம்மாதிரியான செயல்களுக்கு அவர்கள் வெட்கி, நாண வேண்டும். தாமாகவே முன்வந்து, தகுதியான ஒருவரை நாடிச்செல்லுங்கள் என்று கூறி விலகிவிட வேண்டும். அதைவிடுத்து, பொது விளம்பரங்களில் தோன்றி தான் ஏதோ ஒரு பெருத்த சமூக சீர்திருத்தவாதியைப் போன்று நடந்துகொள்வது. கேலிக்கூத்தானது, இதுவும் ஒரு நடிப்புதான், பணத்திற்கான நடிப்பு என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளாதது வரைதான் இவர்களுக்கு வாழ்வு.
சமீப காலமாக பல்கலைக்கழகங்கள், ஒரு புதுவிதமான யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன. இதனை யுக்தி என்று அழைப்பதை விட விளம்பரம் என்று அழைப்பதே காலப்பொருத்தமாகும். அவ்விளம்பரம் இதுதான் ‘இங்கு முனைவர் (டாக்டர்) பட்டம் விற்கப்படும்”. சந்தையில் காய்கறிக்காரன், கூவிக்கூவி காய்கறிகளை விற்பதைப் போன்று, தற்போது பல்கலைக்கழங்கள் முனைவர் பட்டத்தை கூவிக்கூவி விற்று வருகின்றன அல்லது அளித்து வருகின்றன. இதனால், முனைவர் பட்டத்தையே கேலிக்கூத்தாகிவிட்டன. ஒருவருக்கு எதனடிப்படையில் முனைவர் பட்டம் அளிக்கிறோம் என்பதைப்பறியதான சிந்தனையே சிறிதுகூட இல்லாமல், பிரபலம் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில் வாரி வழங்கி, வறட்டு விளம்பரத்தை தேடிக்கொள்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் விஜய் என்ற நடிகருக்கு தனியார் பல்கலைக்கழகமொன்று முனைவர் பட்டம் அளித்ததுதான். இவர் செய்த சாதனையென்ன? முனைவர் பட்டம் என்றாலே என்னவென்று தெரியாத ஒருவருக்கு முனைவர் பட்டம்? முனைவர் பட்டம் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை அப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மாணவர்களிடத்தே கேட்டுப்பாருங்கள் தெரியும். ஏதோ கடைக்குச்சென்று மிட்டாய் வாங்கி வருவதைப்போல, முனைவர் பட்டம் மிக எளிதாக அந்த நடிகருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில், (பிரபலமான) கழுதைகள் கூட முனைவர் பட்டம் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தெளிந்த சிந்தனை கொண்ட எத்தனையோ முற்போக்கு எழுத்தாளர்களை ஈன்றெடுத்த தமிழ் எழுத்துலகில் இதுவரை ஒருவருக்குக் கூட முனைவர் பட்டம் அளிக்கப்பட்டதாக நான் அறிந்திலேன். சீரிய சமுதாயம் உருவாக்கப் பாடுபட்டவர்களுக்கு, முனைவர் பட்டமெல்லம் கிடையாது. அதனை சீர்குலைப்பவர்களுக்கு முனைவர் பட்டம் அதுவும் வழங்குப்படுவது மெத்தப்படித்த (?!) மூதறிஞர்கள் (?!) விற்றிருக்கும் பல்கலைக்கழகம். கொடுமையிலும் கொடுமையாக தோன்றுகிறதல்லவா? காலக்கொடுமை என்பது இதுதான் போலும்.
கற்பா, அது எந்தக்கடையில் விற்கப்படுகிறது என்று கேள்வி கேட்ட நடிகை, இன்று எல்லோர் வீட்டின் வரவேற்பறையிலும் தினமும் தோன்றுகிறார். மதிகெட்ட மக்களும் கண்கொட்டாது அதனை பார்த்து வருகின்றன. இரண்டாவதாக இவர்கள் கையிலெடுப்பது சமூகசேவை. சமூகத்தைப்பற்றி இவர்களுக்கு மட்டுமே அக்கறை என்பது போன்று காட்டிக்கொள்ளத் துடிக்கும் இவர்கள் அதனையும் ஒரு நடிப்பாகத்தான் தொடருகின்றனர். பத்திரிக்கைகளில் தம் படம் வெளிவரும் வரைதான் எல்லா சமூகசேவையும். அதன்பிறகு, எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு விடும். இன்னும் சிலர், ஒருபடி மேலே சென்று, பள்ளிகூடங்கள் நடத்தி பொது சேவை ஆற்றுவதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். உண்மையில், அத்தகைய பள்ளிகள் முழுக்க முழுக்க வணிக நோக்கில்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைகளின் குழந்தைகளுக்கு அத்தகைய பள்ளிகள் என்றுமே எட்டாக்கனிதான். இதற்குப் பெயர்தான் பொது சேவை, சமூக சேவை என்று பிதற்றுன்றனர் இவர்கள்.
அறியாமை இருளில் நிரந்திரமாக மூழ்கியிருப்பதே தங்கள் வாழ்வின் இலட்சியம் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள், இத்தகைய போலி சமூக சேவையாளர்களை அப்படியே நம்பிக்கொண்டு, அவர்களுக்கு சேவை செய்வதையே பிறவிப்பயன் என்று கருதி செயல்படுகின்றனர். இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவேற்றம் செய்தாலும் தகும்.
இறுதியாக இவர்கள் கையிலெடுப்பது அரசியல் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் என்பது ஏதோ திரைப்படத்துறையினரின் ஏகபோக சொத்தாகிவிட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. பண பலம் பெற்றுவிட்ட இவர்கள், அதிகார பலம் பெறுவதற்கான நடவடிக்கைதான் அரசியல் பிரவேசம், அதுமட்டுமல்லாது, அங்குதான் எவ்விதத் தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை. மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவருக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. ஆனால், ஒரு குமாஸ்தா வேலைக்கு மூன்று, நான்கு தேர்வு படிநிலைகள். இதற்குப் பெயர்தான் இந்திய ஜனநாயகம் போலும். முட்டாள்களின் கூடாரமான ரசிகர் மன்றங்களை அரசியல் மன்றங்களாக மாற்றி, குடும்பத்தாரையும் சாதிக்காரர்களையும் முக்கிய பொறுப்பில் அமர்த்திட்டு, கழகக் கண்மணிகளே என்று பேச்சையும் தொடங்கிவிடுகின்றனர்.
மாற்றம் என்பதை தங்களிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதனை அறிந்திடாமல் அது மற்றவர்களால் புகுத்தப்பட வேண்டும் என்று காத்துக் கொண்டு மாறி மாறி வாக்களித்து தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் தமிழக மக்களின் மனதில் இதுவரையிலும் விமிப்புணர்வு தோன்றியதாகத் தெரியவில்லை.
திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமே தவிர அதுவே வாழ்க்கையாகிவிடாது. அதில் நடிப்பவர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள்தான். ஊடகங்கள் இவர்களை பெரிதுபடுத்தி காட்டுவது, வணிக நோக்கத்தினல் தானே தவிர, வேறொன்றும் கிடையாது. இத்தகைய எதார்தத்தை யாவரும் குறிப்பாக இளைஞர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நம்மிலிருந்து ஒரு தலைவர் உருவாக வேண்டுமே தவிர, திரைப்பட நடிகர்களிடமிருந்து அல்ல. நல்ல மெத்தப்படித்த, உயரிய சிறந்த அறிஞர்கள்தான் நாட்டின் தலைவராக வர வேண்டுமே தவிர திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல. இவர்களிடத்தும் முன் கூறிய தகுதியும், உயர்ந்த குணநலன்களும் இருப்பின் தலைவராக வரவேற்கிறோம். அதைவிடுத்து, நடிகர் என்பதை மட்டுமே தகுதியாகக்கொண்டு வருவதை முற்றிலுமாக எதிர்ப்போம்.
திரைப்பட நடிகர்/நடிகைகள் நம்மை உற்சாகப்படுத்த இருக்கும் சேவர்களே தவிர, நம்மைஆள்வதற்கான முதலாளிகளல்ல. இவர்கள் நம் பணியாட்கள், எஜமானர்கள் அல்ல. இவர்களை நம்பிச்செல்வதும் விட்டில் பூச்சியின் வாழ்க்கையும் ஒன்றுதான். ஆதலால், அடிமைத்தனையிலிருந்து மீண்டு, உண்மைத் தலைவர்களை உருவாக்க/ உருவாகிட முன்வாருங்கள்.
1 Comments:
நல்ல பதிவு !
மேலும் தொடர வாழ்த்துகள் !
கருத்துரையிடுக
<< Home